சத்தியமங்கலம் அருகே மரத்தை வேரோடு பிடுங்கிய யானை!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 28) அதிகாலை ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் நடமாடிக் கொண்டிருந்தது. அப்போது காட்டு யானை தனது குட்டியுடன் சேர்ந்து சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தை முட்டி கீழே தள்ளியதில் மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோல் தல மலையில் இருந்து தாளவாடி சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதை அங்கு உள்ள சிலர் வீடியோவாக பதிவு செய்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.