வாகனங்களை வழி மறித்த யானை கூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை! - Elephants blocked vehicles on the forest road
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அருகே உள்ள தாளவாடி வனப்பகுதியானது யானைகள் இடம் பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளது. வனத்தில் வறட்சி நிலவுவதால் தீவனம், தண்ணீர் தேடி வனச்சாலையை வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக தண்ணீர் தேடும் யானைகள் கிராமத்தை நோக்கி படையெடுக்கின்றன.
இந்நிலையில் நேற்று இரவு தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே யானைகள் கூட்டமாக குட்டிகளுடன் வனச் சாலையை வழிமறித்து நின்றது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை சற்று தூரத்திலேயே நிறுத்தி, யானைகள் செல்லும் வரை காத்திருந்தனர். ஆனால் யானை கூட்டம் நீண்ட நேரமாக சாலையிலே நின்றது.
யானைகள் குட்டிகளுடன் உலாவுவதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
தற்போது கோடைக்காலம் என்பதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அடைக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்லுமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.