பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் போக்குக்காட்டும் ஒற்றைக்காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்! - Ramachandra
கிருஷ்ணகிரி:ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் இருந்த ஒற்றைக் காட்டு யானை, சென்னை - பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து பேரண்டப்பள்ளி என்னும் கிராமத்திற்கு அருகே முகாமிட்டு உள்ளது. இதனால் இந்த ஒற்றை காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஆகவே வனத்துறையினர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி இந்த யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை சாலையை கடந்து மீண்டும் திரும்பி சென்றதால் வனத்துறையினரின் முயற்சி தோல்வி அடைந்தது.
மேலும் பேரண்டப்பள்ளி என்னும் கிராமத்தின் அருகே காமன்தொட்டி, கங்காபுரம், தின்னூர், ராமசந்திரம், புக்கசாகரம் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. எனவே மக்கள் வனப்பகுதிக்குள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கோ அல்லது விறகு சேகரிக்கவோ செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். காட்டு யானை வனப்பகுதியை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே முகாமிட்டு உள்ளதால் கிராம வாசிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.