மரம் ஏறி அட்டகாசம்... வாகன ஓட்டியை மிதிப்பேன் என மிரட்டும் யானையின் வீடியோ வைரல்!
ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. முக்கியமாக இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே இன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது. அப்பகுதியில் மரத்தடியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலுக்கு வந்த காட்டு யானை மரத்தடி விநாயகர் கோயிலை சுற்றி வந்து, மரத்தில் மீது கால் வைத்து அதில் இருந்த பழங்களை பறிக்க முயன்றது.
அதேபோல, திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தால் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு வனத்துறை தடைவிதித்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை நிறுத்தி யானைகள் கரும்பு தேடுகின்றன. இந்நிலையில் இன்று மாலை பண்ணாரி வனப்பகுதி சாலையில் நடமாடிய ஒற்றையானை கரும்பு லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
சாலையில் அங்கும் இங்குமாக திரிந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்த யானை சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை திடீரென காலால் எட்டி உதைக்க முயற்சித்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுனர் வலது புறமாக வாகனத்தை இயக்கி சென்றார்.