‘எனக்கும் பசிக்கும்ல..’ ஹாயாக சாப்பிட்டு நீர் அருந்தும் யானையின் வைரல் வீடியோ! - ஊருக்குள் புகுந்த யானை
Published : Dec 29, 2023, 4:20 PM IST
கோயம்புத்தூர்:கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர், மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தடாகம், வரப்பாளையம் பிரிவு அருகே ஸ்ரீராம் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று (டிச.28) இரவு புகுந்த இரண்டு காட்டு யானைகள், தோட்டத்து வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்டுள்ளன. பின்னர், அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு, வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை பயிரை சாப்பிட்டு விட்டு சேதப்படுத்திச் சென்றுள்ளன. இதில் ஏராளமான வாழைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காட்டுயானைகள் தினமும் அப்பகுதியில் சுற்றித் திரிந்து விளைநிலங்களை சேதப்படுத்தி செல்வதால், வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். வீட்டின் முன்பிருந்த வாழைத்தாரை சாப்பிட்டு விட்டு, தண்ணீர் குடித்து செல்லும் காட்டுயானைகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.