சத்தியமங்கலம் அருகே 1 கோடி சிவலிங்கம் கொண்ட கோயில்! - erode
Published : Sep 3, 2023, 10:27 PM IST
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கங்கள் கொண்ட கோயில் நிர்மாணிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதன் முதல் கட்டமாக, தற்போது அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆலயம் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக அமைந்து வரும் ஆலயத்தில், இன்று மங்களநாதர் சிலை மற்றும் எட்டு அடி உயரம் கொண்ட ஐந்து முகங்கள் கொண்ட நாகலிங்க சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சிலையில் ஐந்து முகங்களிலும் நாகலிங்கம் இடம் பெற்றுள்ளது சிறப்பம்சமாக விளங்குகிறது. கூடுதல் சிறப்பாக சிலைகளை காண்போர் கண்களுக்கு பரவசம் ஏற்படும் வகையில் அமையப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயில் அர்ச்சகர்களால் இடைபாடின்றி மந்திரங்கள் முழங்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் என 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.