டெல்லிக்கு சேலத்து மாம்பழத்துடன் ஈபிஎஸ் பயணம்; அரசியலில் பலம் ஏற்படுத்துமா? - அமித்ஷா
கோவை:சேலத்து மாம்பழங்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை காண்பதற்கு கோவை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தது பேசுபொருளாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரத்தோடு டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.26) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அதற்காக சேலத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த அவரை அதிமுக முக்கியப்புள்ளிகளான பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் சந்தித்து வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவருடன் இரண்டு பைகளில் சேலத்து மாம்பழங்களும் கொண்டு வரப்பட்டது.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை பழனிசாமி சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அப்போது அவர்களுக்கு இந்த தித்திக்கும் மாம்பழங்களை வழங்க உள்ளதாக அதிமுகவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வரும் 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலையொட்டி, தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஈபிஎஸ் டெல்லிக்குச் செல்வதாகவும், அவரின் மாம்பழத்துடனான இந்தப் பயணம் தித்திப்பாக அமைந்தாலும், தமிழ்நாட்டு அரசியலில் அவருக்கு வெற்றிக்கனியை எட்டிப் பறிக்க உதவிடுமா? என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.