எச்சமிட்ட காகம் மீது இரக்கம் காட்டிய எடப்பாடி பழனிசாமி!
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். மேலும், ஆறுபடை வீடுகளுள் மூன்றாவது தலமாக விளங்குகின்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கு அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பேட்டரி கார் மூலம் சண்முக விலாஸ் மண்டபத்திற்கு சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கோயிலில் உள்ள சூரசம்ஹார மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி அர்ச்சனை செய்தார். மேலும், மூலவர், சண்முகர் வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சந்நிதிகளில் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
தரிசனத்திற்குப் பின்னர் வாகனம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்குச் சென்றார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது காகம் ஒன்று அவரின் சட்டையின் மேல் எச்சம் போட்டது. இதனையடுத்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மரத்தில் நின்று கொண்டிருந்த காகத்தை விரட்ட முயன்றனர். அப்போது பெருந்தன்மையுடன் எடப்பாடி பழனிசாமி காகத்தை ‘விடுங்கப்பா விடுங்கப்பா’ என்று கூறினார். இந்த நிகழ்வினால் அங்கு சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Ashes Test: இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் இலக்கு!