Viral video: இ-சேவை மையத்தில் ரசீது கேட்ட இளைஞர் மீது தாக்குதல்! - வைரல் வீடியோ
சிவகங்கை:காரைக்குடி நகராட்சியில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு பலவான்குடியைச் சேர்ந்த ஹரி(22) என்ற இளைஞர் தனது தங்கைக்கு கட்டாய கைரேகை பதிவு செய்ய அழைத்து வந்துள்ளார். கைரேகை பணி முடிந்தவுடன் சேவை மைய ஊழியர் ரூ.120 வாங்கி உள்ளனர். அதற்கான ரசீது தரும்படி ஹரி சேவை மைய ஊழியர்களிடம் கேட்டுள்ளார். நீண்ட நேரம் காத்திருந்தும் ரசீது தர ஊழியர்கள் மறுத்ததுள்ளனர்.
பெண் ஊழியர் ரசீதை பேக்கில் எடுத்து ஒளித்து வைத்துள்ளதாக புகார் எழுப்பிய ஹரி பெண் ஊழியரிடம் இருந்து ரசீதை வாங்க முற்பட்டபோது ஊழியர்கள் பிரியா மற்றும் கோகுல் இருவரும் ஹரியை அடித்து வெளியேற்றியுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் கேள்வி கேட்டால் அடிப்பீங்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இ சேவை மையத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து இளைஞர் ஹரி, “கைரேகை பதிவு செய்வதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு ஆணை உள்ளது. ஆனாலும் அவர்கள் 2023இல் புதிதாக ரூல்ஸ் மாற்றியுள்ளதாக கூறி கட்டணம் வாங்கினர். அதற்கு ரசீது கேட்ட போது இன்வாய்ஸ்-யை கிழித்து அக்னாலேட்ஜ்மெண்ட்டை மட்டும் என்னிடம் கொடுத்தனர்.
சில தினங்களுக்கு முன் தலைமை தபால் நிலையத்தில் என் தந்தைக்கு டெமோகிராபிக் அப்டேட் செய்த போது அவர்கள் அதற்காக ரசீது கொடுத்தனர். அதை அவர்களிடம் காட்டிய போது அவர்கள் அதையும் கிழித்து விட்டு, என்னையும் அடித்து வெளியே தள்ளி விட்டனர். அரசிடம் இருந்து ஒரு சேவையை கட்டணம் செலுத்தி பெறுகிறோம் என்றால் அதற்கு ரசீது வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் வழங்கவில்லை” என தெரிவித்தார்.