அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா தொடர்பான விசாரணை.. கோவையில் பரபரப்பு! - anti corruption department
Published : Sep 13, 2023, 9:47 PM IST
கோயம்புத்தூர்:அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொன்னே கவுண்டன் புதூரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் மகள் கவிதா. இவர் பொன்னே கவுண்டன் புதூரில் மகாராஜா ஹாட் சிப்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த மே மாதம் அந்த சிப்ஸ் நிறுவனம் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கவிதாவின் ஹாட் சிப்ஸ் நிறுவனம் பொன்னே கவுண்டன் புதூரில் செயல்படுவதாக நினைத்து இன்று காலை சோதனைக்கு வந்தனர். அப்பொழுது அந்த இடத்தில் வேறு நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் கட்டட உரிமையாளர் சண்முக சுந்தரத்திடம் விசராணை மேற்கொண்டனர். பின்னர் சண்முக சுந்தரத்தின் இல்லத்திற்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வாடகை ஒப்பந்த ஆவணங்களை பார்வையிட்டு அந்த நகல்களை பெற்றனர்.
மேலும், எத்தனை ஆண்டுகள் வாடகைக்கு இருந்தார்கள், யார் பெயரில் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது என்பது குறித்தும், அவர்கள் எப்போது நிறுவனத்தை இங்கு இருந்து காலி செய்தார்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடத்திய விசாரணைக்கு பின்பு புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து கட்டட உரிமையாளர் கூறுகையில், “எங்கள் கட்டடத்தில் மகாராஜா ஹாட் சிப்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது குறித்தும், வாடகை ஒப்பந்தம் குறித்தும், லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், எங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் காட்டிய பின்பு விசாரணை நிறைவடைந்தது” என்றார்.