பழநியில் விலை வீழ்ச்சியால் கொய்யா பழங்களை குப்பையில் கொட்டிய விவசாயிகள்! - பனாரஸ் கொய்யா
திண்டுக்கல்: தற்போது கொய்யா சீசன் தொடங்கிய நிலையில் விலை வீழ்ச்சியால் கொய்யா பழங்களை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்றனர். பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரப்பூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைபட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 எக்டேர் பரப்பளவில் லக்னோ-49 மற்றும் பனாரஸ் ரக கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.
கொய்யாவுக்கென பிரத்யேகமாக, ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே திறந்தவெளியில் சந்தை செயல்படுகிறது. இந்த சந்தையில் நாள்தோறும் 30 டன் கொய்யா விற்பனையாகும். அது மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பழங்களை இங்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது கொய்யா சீசன் தொடங்கி உள்ளதால் கொய்யா பழத்தின் வரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வராததால் கொய்யா விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. வழக்கமாக 22 கிலோ அடங்கிய கொய்யாபழ பெட்டி 800 முதல் 1200 ரூபாய் வரை விலைபோகும்.
தற்போது ஒரு பெட்டி கொய்யா (22 கிலோ) ரூ.400 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கொய்யா பறிக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படியாகவில்லை. அதனால் விற்பனைக்காக கொண்டு வந்த கொய்யா பழங்களை விவசாயிகள் குப்பையிலும், சாலையோரத்திலும் கொட்டிச் சென்றனர்.
இந்நிலையில் தோட்டக்கலைத் துறை மூலமாக கொய்யாப்பழங்களை கொள்முதல் செய்து பழசாறு கம்பெனிக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிளம்ஸ் பழ சீசனில் குறைந்த விளைச்சல்; கொடைக்கானல் விவசாயிகள் வேதனை..