புரட்டாசி மாத விரதம்: புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்! - Jersey cows
Published : Sep 28, 2023, 2:14 PM IST
ஈரோடுமாவட்டத்தில்வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (செப். 28) கூடிய சந்தைக்கு எருமை, கலப்பின மாடு, ஜெர்சி மாடு, வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். எருமைகள் 35 ஆயிரம் ரூபாய் வரையும், ஜெர்சி மாடுகள் ரூ.48 ஆயிரம், சிந்து ரூ.42 ஆயிரம், நாட்டுமாடு ரூ.72 ஆயிரம் வரை விற்பனையானது.
வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கர்நாடக, கேரளா மாநில மாட்டு வியாபாரிகள் குறைந்தளவே சந்தைக்கு வந்தனர். புரட்டாசி மாதம் என்பதால் குறைந்த அளவிலான ஆடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக வளர்ப்பு ஆடுகளை வாங்க வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் விரதம் கடைபிடிப்பதால் விற்பனை குறைவாகவே காணப்பட்டது. முன்னர் 1 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்து வந்த நிலையில் இன்று 70 லட்சம் ரூபாய் அளவிற்கே விற்பனை நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.