விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..! - Cauvery river
Published : Dec 17, 2023, 8:25 PM IST
தருமபுரி:கர்நாடகா அணைகளிலிருந்து தமிழகத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2000 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால், கடந்த 2 நாட்களாகக் காவிரி ஆற்றிலிருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்து வருகிறது. மேலும் காவிரி ஆணையம் கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாகக் காட்சியளித்து வருகிறது.
இந்நிலையில் விடுமுறை தினமான இன்று தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். மேலும் குடும்பம் குடும்பமாக வரும் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி மேற்கொண்டும் விடுமுறையைக் கழித்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் தொங்கு பாலத்தின் மீது நின்று காவிரியின் அழகைக் கண்டு ரசித்தும், மீன் வறுவலை ருசித்தும் மகிழ்ந்தனர். கடந்த சில தினங்களாக ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் இங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.