நெல்லை மழை வெள்ளத்தில் வாழ்வாதாரம் இழந்த கடை உரிமையாளர்.. இழப்பீடு வழங்க வேண்டி கண்ணீருடன் கோரிக்கை! - flood in thamirabarani river
Published : Dec 19, 2023, 7:21 PM IST
திருநெல்வேலி: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் அதி கனமழை பதிவான நிலையில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இரண்டு நாளாக பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. அவ்வாறு வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால், தங்க இடமின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டடதையடுத்து, தற்போது இந்தப் பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளது.
தற்போது திருநெல்வேலி மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில், பாதிப்புக்குள்ளான அனைத்து பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டம் ரயில்வே ஜங்ஷன் அருகில் பிரதான சாலையாக அமைந்திருக்கும் தா.மூ. சாலையில் பல்வேறு கடைகள் அமைத்திருக்கின்றன. இந்நிலையில், நேற்று (டிச.18) பெய்த தொடர் கனமழையில், அங்கிருந்த அனைத்து கடைகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததையடுத்து, வியாபாரிகள் பெரும் பொருட்சேதத்தை சந்தித்துள்ளனர்.
இதையடுத்து, 48 வருடங்களாக அப்பகுதியில் இயங்கி வரும் சரஸ்வதி டிரை கிளினீங் கடையில் வெள்ள நீர் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் சங்கரம்மாள் கூறுகையில், "கடையிலிருந்து அனைத்து துணிகளும் தண்ணீரில் மூழ்கி பெரும் சேதத்துக்குள்ளானது.
துரதிஷ்டவசமாக கடை பூட்டி இருந்ததனால் துணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் இருந்தது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இதனைக் கண்டு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.