மது போதையில் அட்டகாசம் செய்த மாணவர்கள்.. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பரபரப்பு! - பூந்தமல்லி போலீசார்
சென்னை: தலைநகரின் பிரதான நுழைவு வாயிலாக இருப்பது பூந்தமல்லி. இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் இலட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக நேற்று (பிப்.9) மது போதையில் வந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டும் ஆபாசமாக பேசிக்கொண்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து கண்ணாடியை போதையில் உடைக்க சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அங்கிருந்து பதற்றத்துடன் ஓட்டம் பிடித்தனர். 'ரூட்டு தல பிரச்சனை" ஏற்படும் போது மட்டும் பூந்தமல்லி போலீசார் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை கண்காணித்து வந்த நிலையில், தற்போது வழக்கமாக பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.