"காலையில டீக்கடை திறந்தது குத்தமா..?" சரக்கடிக்க டம்ளர் கேட்டு மதுப்பிரியர் அட்டகாசம்! - மது பாட்டிலுடன் அட்டகாசம் செய்த நபர்
திருநெல்வேலி: டவுன் தொண்டர் சன்னதியில் சுப்பையா என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று அதிகாலை 4 மணிக்குக் கடையைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் (39) சுப்பையாவின் டீக்கடைக்கு சென்றுள்ளார்.
மாரியப்பன் கையில் மது பாட்டிலுடன் டீக்கடைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், மது அருந்த டம்ளர் தரும் படி சுப்பையாவிடம் மாரியப்பன் கேட்டுள்ளார். அதற்கு சுப்பையா டீக்கடையில் வைத்து மது அருந்தக்கூடாது என்று கூறியதோடு டம்ளர் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் டீக்கடைக்குள் புகுந்து சுப்பையாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த சிலர் அவரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் மாரியப்பன் சுப்பையா தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சுப்பையா அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
மாரியப்பன் டவுன் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அதிகாலை 4 மணிக்கெல்லாம் மது அருந்த டம்ளர் கேட்டு, அதைக் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை தொழிலாளி தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிகாலை நேரம் மாரியப்பனுக்கு மது எப்படிக் கிடைத்தது?. அவர் கள்ளச் சந்தையில் மது வாங்கினாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.