ஆரணியில் போதை ஆசாமி அரசு பேருந்து அடியில் படுத்துக்கொண்டு அலப்பறை! - thiruvannamalai news
திருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று இரவு செஞ்சி பேருந்து நிலையத்தில் தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது தலைக்கேறிய மதுபோதையினால் மாற்று பேருந்தான விழுப்புரத்திலிருந்து ஆரணி வழியாக வேலூர் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.
நள்ளிரவில் விழுப்புரத்திலிருந்து வேலூர் நோக்கி ஆரணி வழியாக வந்த 216 தடம் எண் கொண்ட பேருந்து, ஆரணி டவுன் பேருந்து நிலையத்திற்கு வந்தது. இந்த நிலையில் இவர் தன்னிடம் இருந்த பணத்தை மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடித்து விட்டதாகவும், ஆகையால் சொந்த ஊருக்குச் செல்ல பணம் இல்லாத காரணத்தினால் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்து டயர் சக்கரத்தில் சிக்கி இறக்கப் போவதாக கூறி பேருந்தின் சக்கரம் முன்பு படுத்துள்ளார்.
பின்னர், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். தகவலின் பேரில் விரைந்த வந்த எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், குடிபோதையில் இருந்த நபருக்கு பேருந்து கட்டணத்தை வழங்கி சொந்த கிராமத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் ஆரணி பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.