முழு கொள்ளளவை எட்டிய வண்டியூர் தெப்பக்குளத்தின் கண்கவர் கழுகுப்பார்வை காட்சி! - latest news
Published : Nov 30, 2023, 1:51 PM IST
|Updated : Nov 30, 2023, 4:01 PM IST
மதுரை:மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், திருமலை நாயக்கர் அரண்மனையைக் கட்டுவதற்காக வண்டியூர் பகுதியில் மணலைத் தோண்டியபோது, அப்பகுதியில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தை சீரமைக்க எண்ணிய மன்னர் திருமலை நாயக்கர், அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, தெப்பக்குளமாக மாற்றினார். அக்குளத்தின் நடுவே வசந்த மண்டபம் ஒன்றையும் கட்டினார். இந்த தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய தெப்பக்குளமான வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், மதுரையின் முக்கிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில், மதுரையிலும் கனமழை பெய்து வருகிறது.
இவ்வாறு, தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. மேலும் தாழ்வானப் பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இது குறித்த ட்ரோன் கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.