கழுகுப் பார்வையில் நெல்லை ரம்ஜான் தொழுகை! - Ramzan special prayer
திருநெல்வேலிமாவட்டம் மேலப்பாளையம், பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், பல்வேறு இடங்களில் புனித ரமலான் சிறப்பு தொழுகை நடத்தினர். புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற குறிக்கோள் உடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரமலானை கடைபிடித்துள்ளனர்.
ஆண்டு முழுவதும் கரோனா இல்லாத ஆண்டாகவும், சமூக நல்லிணக்கத்துடன், சமூக நீதியுடன் அனைத்து மதத்தினரும் கூட்டுக் குடும்பமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கும் விதமாக புனித ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. குறிப்பாக, மேலப்பாளையம், பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகை செய்தனர். மேலப்பாளையம் ஈக்தா திடலில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்றனர்.
அதேபோல், மேலப்பாளையம் பஜார் திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். மேலும், மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், ரம்ஜான் சிறப்பு தொழுகையின் கழுகு பார்வை காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.