மழையில்ல... ஆனா ரோட்டுல வெள்ளம்... அலட்சியத்தால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்!
நெல்லை : திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, மாநகரத்தின் அன்றாட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி டவுன் பகுதியில் இந்த கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாக நெடுஞ்சாலையில் பாய்ந்து ஓடியது.
பின்னர், இது குறித்த தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், தண்ணீர் விநியோகத்தை நிறுத்தி விட்டு, உடைப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும், கடுமையான கோடை காலத்தால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், இது போன்ற அலட்சியத்தால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக ஓடியது காண்போரை வேதனைக்கு உள்ளாகியது.