திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வருமான வரித்தாக்கல் தொடர்பாக வேலூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்!
வேலூர்:வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கடந்த 2012 -13ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், 2015ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தாக்கல் செய்ததுடன், 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், 1 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளதாக கூறி, திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017ஆம் ஆண்டு கதிர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக வழக்குத் தொடர முடியாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், வருமான வரிக் கணக்கை வேண்டுமென்றே தாமதமாக தாக்கல் செய்தாரா? வேண்டுமென்றே தாமதமாக வருமான வரி செலுத்தினாரா? என்பதை விசாரணை செய்ய நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி, கதிர் ஆனந்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜூலை 11ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் ஆஜராகவில்லை. அதனால் இன்று (ஜூலை 27) அவர் நேரில் ஆஜராக வேண்டுமென வாரண்ட் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் வேலூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.