தருமபுரி டூ திருவாரூர் சைக்கிள் பயணம்.. திமுக தொண்டரின் புதிய முயற்சி!
தஞ்சாவூர்: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக கட்சி சார்பில் சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இதனையடுத்து கலைஞரின் நூற்றாண்டு விழாவினை பல்வேறு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் அவர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் தருமபுரி மேற்கு மாவட்டம் அரூர் தாலுக்கா சிக்களூரை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி சேதுநாதன் (வயது 63) என்பவர் தனி ஒரு தொண்டனாக அரூர் முதல் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளை வரை கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் வரும் 19ஆம் தேதி வரை பத்து நாட்கள் சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தனது சைக்கிள் பயணத்தில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிபரப்பியபடி பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து நோட்டீஸ் வழங்கி வாழ்த்து பெற்று வருகிறார். அதேபோல் ஜூன் 14ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்த சேதுநாதன் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, திமுக மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதியை சந்தித்து கலைஞரின் சாதனைகளை விளக்கும் நோட்டீசை வழங்கி தனது பிரச்சார பயணத்தை தெரிவித்தார், இதனையடுத்து துணை மேயர் அஞ்சுகம்பூபதி பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் திமுக தொண்டர் சேதுநாதனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் தஞ்சையிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்குத் தனது சைக்கிள் பயணத்தை சேதுநாதன் தொடர்ந்தார், கலைஞரின் சாதனைகளான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரூபாய் 7,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, தாய் மொழியாம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, குடிநீர் வழங்கல் வாரியம் அமைத்தது, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், உழவர் சந்தை, பெரியார் நினைவு சமத்துவபுரம், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி, மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ், இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நோட்டீசில் அச்சடித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் செல்லும் இடங்களில் சேதுநாதன் வழங்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "கருணாநிதியின் நூற்றாண்டு விழாவிற்காக சைக்கிள் பிரச்சாரம் பயணம் செல்வதாகவும், கடந்த 75 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெற்ற ஊர்களுக்கு சென்று திமுக கட்சிக்காக உழைத்து வருவதாக தெரிவித்தார். மேலும் தான் சைக்கிள் பிரச்சாரப் பயணமாக தற்போது சென்று வந்த ஊர்களை அடுத்தடுத்து சரளமாக தங்கு தடையின்றி தெரிவித்தார், இதனைக் கேட்ட திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரைப் பாராட்டினர்.
இதையும் படிங்க: Power Cut: பவர் கட் பிரச்சனை.. அமைச்சர் முன்பு நாசுக்காக பேசிய திருச்சி எம்பி!