மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்! - திமுக
தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே கவுன்சிலராக உள்ளனர். மொத்தம் உள்ள 14 உறுப்பினர்களில், 12 உறுப்பினர் நேற்று கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், கூட்டம் ஆரம்பிக்கும் போதே, மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருந்து வரும் தமிழ்செல்வி தனது வார்டுக்கு முறையாக நிதி ஒதுக்குவதில்லை எனக்கூறியும், அதற்கு உடந்தையாக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா செயல்படுவதாகவும் கூறி 6-வது வார்டு மாவட்ட கவுன்சிலரான கனிமொழி என்பவர் கண்டன பதாகையுடன் கூட்டத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட கவுன்சிலர் கனிமொழிக்கு எதிராக மற்ற கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை பொறுத்தவரை ஊராட்சி குழு கூட்டம் தொடங்கிய நாள் முதல் இருந்து இன்று வரை நிதி ஒதுக்குவது தொடர்பாக திமுக கவுன்சிலர் இடையில் தொடர்ந்து வாக்குவாதங்கள், தகராறுகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.