விழுப்புரம் ஆரம்பப் பள்ளியில் திடீர் விசிட் அடித்த ஆட்சியர்..! பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு! - tamilnadu higher education minister
Published : Nov 24, 2023, 10:50 PM IST
விழுப்புரம்அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ் அணைக்கட்டின் மறு கட்டுமானப் பணிக்கு இன்று (நவ. 24) தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி சென்றார்.
அதன்பின், மாவட்ட ஆட்சியர் பழனி விழா முடிந்தவுடன் அருகே உள்ள கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தபுரம், திருப்பச்சாவடிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவிந்தபுரம் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி, மாலதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மேலும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் பணிக்கு தினமும் காலதாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அத்துடன் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியரே மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார். மேலும், இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் இரண்டு ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.