உதகையில் படகுப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்! - Nilgiris district collector
நீலகிரி:மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கோடை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உதகை ரோஜா பூங்காவில், ரோஜா கண்காட்சி 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கோடை விழாவின் ஒரு நிகழ்ச்சியாக இன்று உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த படகுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த படகுப்போட்டியில் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியினர் போட்டி, பத்திரிகையாளர்களுக்கான போட்டி, படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான போட்டி என தனித்தனியாக நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நிஷாத் மற்றும் ஆசீப் முதலிடத்தையும், உதகையைச் சேர்ந்த தேவா மற்றும் சுபாஷ் ஆகியோர் இரண்டாம் இடமும், கோவையைச் சேர்ந்த திருமூர்த்தி மற்றும் நிதீஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பரணி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முதலிடத்தையும், சென்னையைச் சேர்ந்த நர்மதா மற்றும் பிரியா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். தம்பதியினர்களுக்கான போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த மிர்துன் ஜெய் மற்றும் புரவி தம்பதியினர் முதலிடத்தையும், ஒடிசாவைச் சேர்ந்த ஆட்நவாஸ் மற்றும் அல்பாகான் தம்பதியினர் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரீத் வெற்றி கோப்பைகளை வழங்கினார். உதகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக படகுப்போட்டி இன்று நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இதையும் படிங்க:மாணவி நந்தினிக்கு இல்லம்தேடி சென்று கவிஞர் வைரமுத்து தங்கப்பேனா பரிசு!