சென்னை ஐஐடியில் சாரங் கலாச்சார திருவிழா - வயலின் வாசித்த இயக்குநர் காமகோடி!
Published : Jan 11, 2024, 9:54 PM IST
சென்னை:சென்னை ஐஐடியின் 50-வது ஆண்டு சாரங் கலாச்சார விழா நேற்று(ஜன. 10) தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஐஐடியில் வருடாந்திர கலாச்சார விழா கடந்த 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இது மார்டி கிராஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
தென்னிந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இத்திருவிழா, இந்திய வேர்களை மதிக்கும் விதமாகவும், இக்கல்வி நிறுவன வளாகம் எங்கும் காணப்படும் மான்களைக் கொண்டாடும் விதமாகவும் கடந்த 1996 முதல் 'சாரங்' என மறுபெயரிடப்பட்டது. இந்நிலையில் கலாச்சாரத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக, நேற்று (ஜன.10) ஓபன் ஏர் தியேட்டரில் நடைபெறும் ‘கலாச்சார இரவு’ நிகழ்ச்சியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வயலின் இசைத்து தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அவர் பேசுகையில் "சாரங்கை பிரமாண்ட வெற்றியடையச் செய்ய சுமார் 850 மாணவர்கள் இணைந்து செயலாற்றி வருகின்றனர். சிறிய கலாச்சார விழாவாக ஆரம்பித்த சாரங், கடந்த 50 ஆண்டுகளில் கலைஞர்கள், மாணவர்கள், சமூகங்களுக்கு இடையே பெரிய அளவிலான சர்வதேச ஒத்துழைப்பாக உருவெடுத்து தலைமுறைகளைக் கடந்து நீண்டதூரம் பயணித்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்சியில் முதல் முறையாக நாட்டுப்புறக்கலைகள் நடைபெற்றது, இதனை தொடர்ந்து ஜே ஹோலி சி குழுவினரின் EDM நைட் மேட்டிஸ், சாட்கோ இரட்டையர்களின் நிகழ்ச்சியும் நடபெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்சியில் RJD இசைக்குழு மற்றும் தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவினர் வழங்கும் ராக் நைட் நிகழ்ச்சிய நடைபெறவுள்ளது.
மேலும் பல்வேறு கலாச்சாரக் கலைஞர்களை அழைத்து வர சாரங் குழு ஏற்பாடு செய்துள்ளது.இதில் நாசர், கவுதம் வாசுதேவ் மேனன், ருக்மிணி விஜயகுமார், உஷா உதுப், மனோஜ் பாஜ்பாய் போன்ற புகழ்பெற்ற பிரபலங்கள் இதில் இடம்பெற்ற உள்ளனர்.