மறைந்த நடிகர் செவ்வாழை ராசு உடலுக்கு பாரதிராஜா நேரில் அஞ்சலி
தேனி: தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்தவர், நடிகர் செவ்வாழை ராசு. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த ‘கிழக்குச்சீமையிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த செவ்வாழை ராசு, அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இதனிடையே, இயக்குநர் அமீரின் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ படத்தில் ‘பொணந்திண்ணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்றார். இதனையடுத்து மைனா, கந்தசாமி, வேலாயுதம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதனையடுத்து, நேற்று (மே 18) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் தேனி மாவட்டம் வருசநாடு அடுத்த கோரையூத்து கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா செவ்வாழை ராசுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.