ஆடிக் கிருத்திகை: முருகனை வழிபட்ட முருகதாஸ்! - Tiruchendur Murugan temple
தூத்துக்குடி: தென்னிந்திய பாரம்பரியத்தின்படி கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது. "ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபட்டால் தேடிவரும் நன்மைகள்" என்பது ஆண்மிகவாதிகளின் கூற்று ஆகும்.
மேலும், ஆடிக் கிருத்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும், சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை கிடைக்கும் என்கின்றனர், முன்னோர்கள்.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இன்று (ஆகஸ்ட் 09) ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் '1947' திரைப்படத்தின் இயக்குநர் பொன்குமார் இருவரும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
கோவிலில் மூலவர் சந்நிதியில் உச்சிகால தீபாராதனையின்போது பூஜை செய்து வழிபாடு செய்த அவர்கள், சண்முகர், தட்சிணாமூர்த்தி மற்றும் பெருமாள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளையும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியில் வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கண்டதும் அர்ச்சகர்களும் பக்தர்களும் மற்றும் கோயிலின் தனியார் காவலாளிகளும் செல்ஃபி எடுத்தும் தனியே புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.