25 பைசா கொடுத்தால் புடவை.. துணிக் கடையில் குவிந்த இல்லத்தரசிகள்!
Published : Sep 4, 2023, 10:23 AM IST
திண்டுக்கல் நாகல் நகரில் புதிதாக தனியாருக்கு சொந்தமான துணிக்கடை திறப்பு விழா நேற்று (செப். 4) நடைபெற்றது. திறப்பு விழாவை முன்னிட்டு அன்றைய தினம் காலையில் பழைய 25 பைசா நாணயம் முதலில் கொண்டு வரக்கூடிய 500 பொது மக்களுக்கு காலை 10 மணிக்கு இலவசமாக புடவை ஒன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான போஸ்டர்கள் நாகல் நகர், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் காலையிலேயே கடை வாசல் முன்பு மக்கள் கூட்டம் அலை மோத துவங்கியது. பொது மக்கள் வரிசையாக நின்று, புடவையை வாங்கிச் செல்வதற்கு ஏற்றாற் போல் கட்டை கட்டப்பட்டிருந்தது.
நேரம் ஆக ஆக, பொது மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியதை அடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால், காலை 8 மணி அளவில் பொது மக்களிடம் இருந்து பழைய 25 பைசா நாணயத்தை வாங்கிக் கொண்டு, முதலில் வந்த 500 நபர்களுக்கு புதிய புடவையை கடை ஊழியர்கள் வழங்கியதாக சொல்லப்படுகிறது. திறப்பு விழா ஆஃபராக 25 பைசா கொடுத்தால் புடவை இலவசம் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.