முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற +2 தேர்வில் முதலிடம் பிடித்த நந்தினி! - TN cm mk stalin
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் தமிழகத்தில் மொத்தம் 94.03% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர், மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி என்பவர் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகம், கணக்குப்பதிவியல், கணினிபயன்பாடு என அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று(மே 9) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மாணவி நந்தினி குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, "என்ன உதவி வேண்டுமானாலும் தங்களிடம் கேட்கலாம் என்றும், செய்ய தயாராக இருக்கிறோம்" எனவும் மாணவி நந்தினியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.