லியோ படத்தை காண உற்சாகத்துடன் வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்! - Leo movie
Published : Oct 19, 2023, 7:36 PM IST
கோயம்புத்தூர்: விஜய் நடிப்பில் இன்று லியோ திரைப்படம் ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியானது. தமிழகத்தில் முதல் காட்சி ஒன்பது மணிக்கு திரையிடப்பட்டது. கோவையில் பெரும்பாலான திரையரங்குகளில் ஒன்பது மணி காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆனது.
ஒன்பது மணி காட்சி முடிந்து வெளியில் வந்த ரசிகர்கள் பலரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர். அடுத்த காட்சி 12:30 மணியளவில் கோவை சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை காண்பதற்கும் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து லியோ.. லியோ.. என உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் இக்காட்சியை காண்பதற்கு அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மருதாச்சலம் என்ற மாற்றுத்திறனாளி ரசிகர் மிகவும் உற்சாகத்துடன் வந்திருந்தார். அவர் தன்னுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தில் திரையரங்கிற்கு வந்திருந்தார்.
அப்போது அவரும் அவருடன் வந்த நண்பரும் லியோ திரைப்படத்தின் முதல் அப்பேட் வந்ததிலிருந்து சுமார் ஒரு வருட காலமாகவே இப்படத்தை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு டிக்கெட் இலவசமாகவே வழங்கப்பட்டதாக தெரிவித்தார். விஜயை நேரில் காண வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர்கள் தங்களை தொலைக்காட்சி வாயிலாக விஜய் பார்த்தால் கண்டிப்பாக தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.