சென்னிமலை முருகன் கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - சென்னிமலை முருகன் கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா
Published : Nov 24, 2023, 3:57 PM IST
ஈரோடு:சென்னி மலையில் அமைந்து உள்ள சென்னிமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கந்தசஷ்டி பாடப்பட்ட தலம் என்றும் போற்றப்படும் இக்கோயிலில் இருந்த கொடி மரம் பழுது அடைந்ததையடுத்து சென்னிமலை அனைத்து செங்குந்த சமுதாயத்தின் சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேக்கு மரத்திலான புதிய கொடி மரம் அமைக்க திட்டமிடப்பட்டது.
சுமார் 34 அடி உயரம் கொண்ட கொடி மரத்தை, இலுப்பை எண்ணெய், சந்தனாவி தைலம், புங்க எண்ணெய், வேம்பு எண்ணெய் உள்ளிட்ட ஐந்து வகையான எண்ணெயில் கடந்த பல மாதங்களாக ஊற வைக்கப்பட்டது. இதனை அடுத்து மரத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டு, கடந்த மாதம் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா இன்று (நவ.24) நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, புனித நீர் கொண்டு கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.