சென்னை வெள்ள நிவாரணமாக தருமபுரி பச்சமுத்து கல்வி குழுமம் சார்பில் 50 டன் அரிசி அனுப்பி வைப்பு!
Published : Dec 7, 2023, 6:56 PM IST
தருமபுரி: மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்படத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாகச் சென்னை பெருநகரின் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரானது சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளானர்.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு மீட்டு பணியில் ஈடுபட்டு மக்களை மீட்டு, உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளைச் செய்து வருகிறது. இந்நிலையில், தருமபுரி பச்சமுத்து கல்வி குழுமங்களின் சார்பில் ஐந்து கிலோ அளவில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை லாரி மூலமாகச் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கல்வி குழுமங்களின் தலைவர் பாஸ்கர் பேசியதாவது; "சென்னையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அதன் காரணமாக அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு லாரி எனத் தொடர்ந்து 5 நாட்களாக 50 டன் அரிசி வரை அனுப்பி வைத்து வருகிறோம்" என தெரிவித்தார்.