தருமபுரியில் அரசு அலுவலகத்தில் புகுந்த உடும்பு..!
தருமபுரி:தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு கலை கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சுமார் 7 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான உடும்பு ஒன்று அலுவலக வளாகத்தில் நுழைந்தது. இதனைத்தொடர்ந்து ஒரே பகுதியில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் படுத்தபடி கிடந்துள்ளது. இதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதன் பின்னர், அங்கிருந்த பணியாளர்கள் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து அங்கு தருமபுரி வனத்துறை அதிகாரிகள் விரைந்தனர். இதனையடுத்து வனவர்கள் முனியப்பன், நாகேந்திரன் ஆகியோர் பாம்புகளை பிடிக்கப் பயன்படுத்தும் பிரத்யேக உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த உடும்பை லாவகமாகப் பிடித்து கூண்டில் அடைத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, அந்த உடும்பை அருகில் உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர். இவ்வாறு நீண்ட நேரமாக உடும்பு, அரசு அலுவலகத்தில் சுற்றி திரிந்ததால், அரசு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.