விடுமுறை நாள் என்பதால் பங்குனி உத்திரத்திருவிழாவிற்கு பழனியில் குவிந்த பக்தர்கள் - rope car
திண்டுக்கல்: பழனியில் பங்குனி உத்திரத்திருவிழா ஐந்தாம் நாள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையினால் 3 மணி வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 5 ஐந்து நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா துவங்கியது. இதைத்தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாளை மாலை நடைபெறவிருக்கும் முத்துக்குமாரசுவாமி வள்ளி,தெய்வானை திருகல்யாண நிகழ்வும், நாளை மறுநாள் (4ம் தேதி) திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதற்காக பங்குனி மாதத்தில் முருக பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தகாவடிகளை எடுத்து பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை குளிர்விப்பது வழக்கம். இந்நிலையில் பங்குனி உத்திரத்திருவிழா ஐந்தாம் நாளான இன்று முத்துக்குமாரசாமி, யானை ரதத்தில் வலம் வந்து காட்சியளிப்பார். மேலும் இன்று முதல் வருகின்ற 6ஆம் தேதி வரை இரவு தங்கத்தேர் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய குவிந்தனர். மேலும் பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், தீர்த்தக் கலசங்களை எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
படிபாதை, மின்இழுவை ரயில்,ரோப்கார் ஆகியவை மூலம் மலைக்கோயில்களுக்குச் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் காணிக்கை செலுத்துவதற்காக அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குருத்தோலை ஞாயிற்றை முன்னிட்டு சாலைகளில் ஓசான்னா... பாடல்களை பாடியபடி பவனி