aadi perukku: ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஒகேனக்கலில் புனித நீராடிய பக்தர்கள்! - தருமபுரி மாவட்ட செய்தி
தருமபுரி:தமிழ்நாடு முழுவதும் ஆடி மாதத்தில் பதினெட்டாம் நாள் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீருக்கு மக்கள் மலர்த் தூவி பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தருமபுரிமாவட்ட மக்கள் கொண்டாடும் பண்டிகையில் முக்கியமானது, ஆடி மாதம் 18 நாள்.
இதனை ஆடிப்பெருக்கு விழாவாக, தருமபுரி மாவட்ட மக்கள் ஒகேனக்கல், தீர்த்தமலை, தென்பெண்ணை ஆறு உள்ளிட்டப் பகுதிகளில் ஆற்றில் நீராடி வழிபாடு செய்வது வழக்கம். இன்று ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி, காவிரி ஆற்றில் நீராடி, தங்கள் இஷ்ட தெய்வங்களை ஒகேனக்கல் ஆற்றில் புனித நீராட வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
தருமபுரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீராடிச் சென்றனர். அதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்தது. அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி பார்வையிட்டார்.