தருமபுரி கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்! - kalabiraver
Published : Sep 7, 2023, 7:25 PM IST
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று (செப்.07) காலை கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்திர ஹோமம் நடைபெற்றது. இதனையடுத்து காலை 8 மணிக்கு கோ பூஜை, அஸ்தவ பூஜை மற்றும் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பைரவர் உற்சவமூர்த்தி திருக்கோயிலை வளம் வந்து பைரவருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிலர் தங்கள் வேண்டுதலைச் சாம்பல் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு 1008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு, சத்ரு சம்ஹார யாகம், 64 பைரவர் யாகம் மற்றும் மகா குருதி பூஜை நடைபெறும். மேலும், அதிகாலை 3 மணிக்குப் பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.