வேடசந்தூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில் விநோத வழிபாடு! - Ayudha Puja and Navratri festival
Published : Oct 23, 2023, 3:45 PM IST
திண்டுக்கல்:வேடசந்தூர் அருகே மகாலட்சுமி அம்மன் கோயில் ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி விழா தொடங்கிய நிலையில் பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் இருந்தனர். கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்ப்பட 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன்பாக அமர்ந்தனர். அதனைத்தொடர்ந்து கோயில் பூசாரி ஆணி அடித்த காலணி அணிந்து ஆசி வழங்கினார்.
அதன் பின்னர் கோயில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். அதனை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று கடவுளை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.