தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்.. காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்! - தண்ணீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
Published : Sep 10, 2023, 10:27 PM IST
திருநெல்வேலி:பருத்திப்பாடு பஞ்சாயத்துக்குட்பட்ட ஆணையப்பபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்கள் விவசாயத்தையே முழுமையாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் சரிவர நடைபெறவில்லை. இந்நிலையில், ஆணையப்புரம் கிராமத்திற்கு கடந்த மூன்று மாதமாக குடிநீர் மற்றும் போர் வாட்டர் முழுவதுமாக வராமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் அன்றாட வேலைக்குச் செல்லவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு கொடுத்தும், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த பலனும் இல்லையென கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று (செப்.10) கிராமத்தில் உள்ள ஆலமரத்தில் 100க்கும் மேற்பட்ட காலிக் குடங்களை கட்டி தொங்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “தண்ணீர் கிடைக்காமல் பெரும் அவதி அடைந்து வருகிறோம். இந்த போராட்டத்திற்கு பின்பும் தண்ணீர் உடனடியாக கொடுக்க முன் வரவில்லை என்றால் நாங்களும் மரத்தில் தொங்குவதை தவிர வேறு வழி இல்லை” என வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!