கார்த்திகை தீபம்: பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் 2,100 மீட்டர் திரி கொண்டு மகா தீபம்!
Published : Nov 27, 2023, 10:04 AM IST
பெரம்பலூர்:திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (நவ.26) எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் 2,100 மீட்டர் திரி கொண்டு தீபம் ஏற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள 210 மகாசித்தர்கள் வாசம் செய்வதாக கூறப்படும் பிரம்மரிஷி மலையில் வருடந்தோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு, மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன் வகையில், நேற்று 41 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோமாதா, கஐ, அஸ்வ பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அருள்மிகு பிரம்ம புரீஸ்வரர் திருக்கோயிலில், தீப செப்புகொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக புறப்பட்டு பிரம்மரிஷி மலை வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து, பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து, பிரம்மரிஷி மலையில் 5 அடி உயர செப்பு கொப்பரையில் 2,100 மீட்டர் திரி, 3 ஆயிரத்து எட்டு லிட்டர் எண்ணெய், நெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு பூதகண, கைலாச வாத்தியங்கள் முழங்க, சித்தர்கள் யாகத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை பிரம்மரிஷி மலை சித்தர்கள் தவயோகி தவசி சுவாமிகள் ஏற்றிவைத்தனர்.
இந்த பிரம்மரிஷி மலை கார்த்திகை தீபத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி உட்பட சுற்றுவட்டார கிராமத்திலிருந்து சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரோ கோஷத்துடன் தீபதரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை பிரம்மரிஷி மலை மகாசித்தர்கள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.