தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டி.பி.சுரேஷ் குமார் பதவியேற்பு - தென்காசி சட்டம் ஒழுங்கு
Published : Oct 18, 2023, 5:21 PM IST
தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிந்து புதிய மாவட்டமாக உருவாகி 4 ஆண்டுகளான நிலையில், மாவட்டத்தின் 4வது புதிய காவல் கண்காணிப்பாளராக திருவாரூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சுரேஷ்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தென்காசி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுத்து கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் குற்றாலம் சுற்றுலாத் தலம் உள்ளதால் அப்பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
தென்காசி மாவட்டம் கேரள மாநில எல்லையில் உள்ளதால் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக புகார் வருவது குறித்து கேட்டதற்கு, மாவட்டத்தில் குட்கா, கஞ்சா சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் மாணவர்களிடையே போதை பொருள் பழக்கத்தை தடுப்பதுடன் போதை பொருள் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் குற்றங்களை நடக்காமல் தடுப்பது மற்றும் நடந்த குற்றங்கள் குறித்து உடனடி தீர்வுகள் காண்பது போன்ற யுக்திகளை கையாள உள்ளதாக தெரிவித்தார். மேலும் ரவுடிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்தார்.