வீடியோ: தமிழக மக்களின் பாகுபலியே.. எடப்பாடி பழனிசாமிக்கு கட் அவுட்.. நெட்டிசன்கள் கிண்டல்.. - கோயம்புத்தூர் செய்திகள்
கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அதிமுக வடக்கு மாவட்டத்தினர் பாகுபலி வேடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர். அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளியானது. அதில், அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை ஈபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக கோவை வடக்கு மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர் "தமிழக மக்களின் பாகுபலியே!! கழகப் பொதுச் செயலாளரே!!! தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்" என்ற வாசகங்களுடன் கட் அவுட்டை வைத்துள்ளனர்.
பாகுபலி வேடத்துடனும், கையில் வாளுடனும் நிற்பதை போன்று வடிவமைத்துள்ளனர். அதில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அருண்குமார், ஜெயராமன் ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த கட் அவுட்டை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கொற்கை துறைமுகம் எங்கே..? தூத்துக்குடி கடலில் ஆய்வு