மோட்டரில் நூதன முறையில் தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி? - gold smuggling in airport
சென்னை:அபுதாபியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி, சுற்றுலா விசாவில் அபுதாபிக்கு போய்விட்டு திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த பயணியை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள் அவருடைய உடைமைகளை முழுமையாக சோதித்துள்ளனர். அதோடு அவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து சோதனை நடத்தியுள்ளனர்.அந்த சோதனைகளில் எதுவும் சிக்கவில்லை. இருந்தும் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை.
ஆகவே அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த, ஒவ்வொரு பொருளையும் ஆய்வு செய்தனர். அப்போது வெளிநாட்டிலிருந்து இவர் வாங்கி வந்த மின் மோட்டார் ஒன்று இருந்தது. அதிகாரிகள் அந்த மின்மோட்டாரை கழற்றி பார்த்து ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த போது அந்த மின்மோட்டாருக்குள், தங்க உருளை ஒன்றை அவர் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் அந்த தங்க உருளை 1.8 கிலோ, அதாவது அதன் சர்வதேச மதிப்பு ரூ.95 லட்சம் ஆகும். இதையடுத்து தங்க உருளையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.