கடலூர் வெள்ளி கடற்கரையின் கழுகுப் பார்வை காட்சிகள் - silver beach
தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்ததாக மிகப்பெரிய கடற்கரையாக கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரை கருதப்படுகிறது. மே தினத்தை முன்னிட்டு, 3 நாட்கள் தொடர் விடுமுறை, பள்ளிகளில் கோடை விடுமுறை, ஞாயிறு விடுமுறை என அனைத்தும் ஒன்று சேர, பொதுமக்களும் வெள்ளி கடற்கரையில் ஒன்று கூடி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது, பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளி கடற்கரையில் காலை முதலே குவியத் தொடங்கினர். அதிலும், மாலை 3 மணிக்கு மேலாக வெயில் சாயும் நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெள்ளி கடற்கரையில் திரண்டனர்.
இவ்வாறு வந்த பொதுமக்கள் கடல் நீரில் குளித்து மகிழ்ந்தனர். பெற்றோர், தங்கள் உடைய குழந்தைகள் உடன் குதிரை சவாரி உள்பட பல்வேறு விளையாட்டுகளில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், இன்று அதிக அளவிலான மக்கள் கூட்டம் நிறைந்து உள்ளதால், அதிகப்படியான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், பொதுமக்கள் திருடர்களிடம் இருந்து விழிப்புடன் இருக்குமாறு காவல் துறை தரப்பில் ஒலிபெருக்கியில் அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.