Crocodile: பவானி ஆற்றில் முதலை - பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்! - முதலை நடமாட்டம்
கோவை:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரம் பகுதியில் பவானி ஆற்றங்கரையில் முதலை நடமாட்டம் தென்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் முதலை ஒன்று அமைதியாக படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பரிசல் ஓட்டி, தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆற்றங்கரையில் படுத்திருக்கும் முதலை சற்று நேரத்தில் பவானி ஆற்றில் இறங்குகிறது. இந்த முதலை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள், பவானி ஆற்றில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். குளிக்கவும், துணி துவைக்கவும் பவானியாற்று நீரைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் பவானி ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே, வனத்துறையினர் பவானி ஆற்றில் சுற்றித்திரியும் முதலையைப் பிடித்து வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்" என்றனர்.
லிங்காபுரம் பகுதியில் முதலை நடமாட்டம் தென்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது என்றும், மீன் பிடிக்கச் செல்வோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Video - ஆம்பூர் மலைப்பகுதியில் நடமாடும் ஒற்றைக்கொம்பன் காட்டு யானை