பழம்பெரு நடிகர் பாலையாவின் பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் பிடிபட்ட முதலை..! - crocodile found in swimming pool
Published : Aug 29, 2023, 4:42 PM IST
சென்னை: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலாஜி தங்கவேல். இவர் மறைந்த பழம்பெரு நடிகர் டி.எஸ்.பாலையாவின் பேரன் ஆவார். இவரது வீடு பெருங்களத்தூர் நெடுங்குன்றம் சாலையில் அமைந்துள்ளது. இவர் பாஜகவில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓபிசி அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார்.
இந்தநிலையில் தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தன் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தை சுத்தம் செய்வதற்காக இன்று (ஆக 29) காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.
அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றை அடி நீளம் முதலை இருப்பதை கண்டுள்ளார். பின்பு தானே நீச்சல் குளத்தில் இறங்கி முதலையை லாவகமாக பிடித்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து அடைத்துள்ளார். அதன் பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த பூங்கா ஊழியர்கள் முதலையை உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் பாலாஜி தங்கவேல் கூறும்போது, தான் வசிக்கும் நெடுங்குன்றம் பகுதி வண்டலூர் உயிரியல் பூங்காவின் அருகில் இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்றும்போது முதலைகள் பிடி படுவது வாடிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது வீடு சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டு இருந்தும், நீச்சல் குளத்தில் முதலை இருந்தது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அவர், அப்பகுதிகளை சுற்றி உள்ள நீர் நிலைகளில் அதிக அளவில் முதலைகள் தென்படுவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாகவும், இது குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.