TNPL: இம்பாக்ட் பிளேயர் விதி.. ஆட்டத்தின் போக்கை மாற்றும் என ஷாருக்கான் பேச்சு - ஷாருக்கான்
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் 7வது சீசன் வருகிற 12ஆம் தொடங்கி ஜூலை 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பால்சி திருச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதன் இறுதி ஆட்டம் நெல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிதாக இம்பாக்ட் பிளேயர் வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 9) போட்டி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடைபெற்றது.
இதில் புதிய டி-ஷர்ட்டுகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் கிரிக்கெட் வீரர்கள் ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது, இம்பாக்ட் பிளேயர் விதி ஆட்டத்தின் போக்கை மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும், இது தற்போது டி.என்.பி.எல் இல் அறிமுகம் செய்யப்படுவதால் போட்டிகள் சுவாரஸ்யமாகும் எனவும் ஷாருக்கான் தெரிவித்தார்.
அதேபோல், டிஎன்பிஎல் போட்டிகள் ஐபிஎல் மட்டுமின்றி பிற போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்துவதாகவும், இதனை வீரர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சாய் கிஷோர் தெரிவித்தார்.