புன்செய்ப்புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை! - karnataka
ஈரோடு: ஈரோடு மாவட்டம், புன்செய்ப்புளியம்பட்டி கால்நடைச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விற்க வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 13) கூடிய சந்தைக்கு 40 எருமைகள், 250 கலப்பின மாடுகள், 100 கன்றுகள் 300 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் 36 ஆயிரம் ரூபாய், ஜெர்சி மாடு 52 ஆயிரம் ரூபாய், சிந்து மாடு 48 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு 72 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. வளர்ப்புக் கன்றுகள் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
அதேபோல, 400க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச்சென்றனர். சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் ரூ. 1 கோடி ரூபாய்க்குமேல் விற்பனையானது.
கடந்த வாரத்தை விட இந்தவாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் விலையும் 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், பரவலாக மழை பெய்துள்ளதால், கறவை மாடுகளை விவசாயிகள் வாங்கிச் சென்றதாகவும், அனைத்து கால்நடைகளும் 1 கோடி ரூபாய்க்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.