காங்கிரஸ் கட்சியினரை சந்திக்க ஜனாதிபதி விரும்பவில்லை - புதுச்சேரி எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றச்சாட்டு.. - Puducherry
புதுச்சேரி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ள நிலையில், கடற்கரை சாலையில் உள்ள பாரம்பரிய நீதிமன்ற குடியிருப்பு விடுதியில் தங்கி உள்ளார். இங்கு காலை 9 மணி முதல் குடியரசுத் தலைவர் முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி அவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன், குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்றார்.
ஆனால் எம்.எல்.ஏ வைத்தியநாதனுக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை என கூறப்பட்டது. இதனால் அவர் குடியரசு தலைவரை சந்திக்காமல் வெளியேறினார். இது தொடர்பாக எம்.எல்.ஏ வைத்தியநாதன் கூறுகையில், “குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி அவரை சந்திக்க விரும்புகிறீர்களா..? என அதிகாரிகள் என்னிடம் வீட்டிற்கு வந்து கேட்டனர்.
இதனை ஏற்று நான் சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால் இங்கு வந்த போது அவரைக் காண அனுமதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி என்பதால் என்னை சந்திக்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மணிப்பூர் விவகாரம் போன்றவை குறித்து அவரிடம் மனு கொடுக்க இருந்தேன்” என தெரிவித்தார்.