ரூ.21 லட்ச பேட்டரி கார்.. 3 முறை நடுரோட்டில் நின்ற அவலம்.. டென்ஷனான ஓனர் தர்ணா - மகேந்திரா எக்ஸ் யூ வி
சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர், ராம் ராஜேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குரோம்பேட்டையிலுள்ள மகேந்திரா ஷோரூமில் ரூ.21 லட்சம் மதிப்புடைய மகேந்திரா எக்ஸ்.யூ.வி. என்ற பேட்டரி காரை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வாங்கி உள்ளார்.
இந்தநிலையில் மூன்று மாதங்களில் 3 முறை காரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராம் ராஜேஷ் தனது அலுவலகத்திற்குச் செல்வதற்காக காரை எடுத்துக்கொண்டு, சிறிது தூரம் சென்ற நிலையில், தொழில் நுட்பக்கோளாறு காரணமாக நின்று விட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மகேந்திரா ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டரில் புகார் அளித்தும் காரை 6 மணி நேரத்திற்குப் பின்னரே எடுக்கவந்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ராம் ராஜேஷ் இன்று குரோம்பேட்டை மகேந்திரா ஷோரூமில் சென்று புகார் அளித்தபோதும் சரியாக பதிலளிக்கதால், ராம் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஷோரூம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ராம் ராஜேஷ் கூறியதாவது, '3 மாதங்களாக கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. மாதம் 33 ஆயிரம் ரூபாய் இ.எம்.ஐ. கட்டும் சூழ்நிலையில் இந்த வண்டியை வாங்கி ஏமாந்துவிட்டேன்’ என வேதனைத் தெரிவித்தார். மேலும் காரை விற்பனை செய்யும் நோக்கத்தில் பல பொய்களைக் கூறி, காரை ஷோரூமில் இருந்தவர்கள் விற்பனை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:திச, திஈய, குவிரன் - நெல்லையில் அடுத்தடுத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தமிழ் எழுத்துகளும் பெயரும்!